கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததை பின்னர் திரும்பப் பெற்றது குறித்து, கூட்டணி நலனுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டதால் தான் முடிவை மாற்றிக் கொண்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் திமுக தலைமையிலான அரசு தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
மேலும், பார்லிமென்டில் பேசுவதற்கான நேரம் குறைவாக இருப்பதால் தனது நோக்கங்களை முழுமையாக முன்னெடுக்க சிரமம் இருப்பதாகவும், சட்டசபையில் இருந்தால் விளிம்பு நிலை மக்களின் பிரச்னைகளை அதிகமாக பேச முடியும் என்ற நம்பிக்கையால் தான் போட்டியிட முடிவு செய்ததாகவும் விளக்கினார்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இளைய பெருமாளின் மருமகளுக்கு வாய்ப்பு தர முதலில் முடிவு செய்ததாகவும், அவர் தலித் சமூகம் அல்லாதவர் என்பதால் அது சாத்தியமாகவில்லை என்றும் கூறினார். இளைய பெருமாள் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது தொகுதியை விட்டுத்தந்து, காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக ஜோதிமணியை அறிவித்ததாக தெரிவித்தார்.
புதுச்சேரி தொகுதி பங்கீடு குறித்து, வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகவும், அதன்படி விசிகவுக்கு உழவர்கரை தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார். உழவர்கரையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுக்களை திரும்பப் பெறவில்லை என்றாலும், பின்னர் உழவர்கரையில் விசிக வேட்பாளர் மட்டும் போட்டியிட, அவருக்கு ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பணியாற்றுவார்கள் என்ற புரிதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்; இதன் அடிப்படையில் ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனம் தொகுதிகளில் விசிக வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல், அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.




