த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு வரும்போது கூட்டம் அலைமோதுவதாகவும், அதை கட்டுப்படுத்த கட்சி நிர்வாகிகளும் போலீசாரும் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் திருத்தணி உள்ளிட்ட பல தொகுதிகளில் வேட்பாளர்கள் கட்சி நிர்வாக ஆதரவு குறைவாக, பெரும்பாலும் தனியாகவே பிரச்சாரம் செய்யும் நிலை இருப்பதாக கட்சிக்குள் பேசப்படுகிறது.
2024ல் கட்சி தொடங்கியதிலிருந்தே பல கட்டங்களில் குழப்பம் தொடர்ந்ததாக நிர்வாகிகள் கூறுகின்றனர். கொள்கை நிலைப்பாடு குறித்து தெளிவு இல்லாத நிலையில், சில தலைவர்களை ‘கொள்கை முன்னோடிகள்’ என அறிவித்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2024 அக்டோபரில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் பெரும் கூட்டம் திரண்டதால் கட்சி சரியான பாதையில் செல்கிறது என்ற தோற்றம் உருவானது.
2025ல் சில முக்கிய நபர்கள் இணைந்த பிறகு நிர்வாக கட்டமைப்பு வலுப்பெறுகிறது என்ற எண்ணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 2025 நவம்பரில் செங்கோட்டையன் இணைந்த பின்னர், கட்சிக்குள் பல கோஷ்டிகள் தனித்தனியாக இயங்கும் நிலை வெளிப்பட்டதாகவும், ஒரே கட்டுப்பாட்டு சங்கிலி இல்லாமல் பல அணிகள் இணைநிலையாக செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
மாவட்ட செயலர்கள் மட்டுமே இருப்பதாகவும், நகரம், பேரூர், கிளை, பகுதி போன்ற அடித்தள மட்ட நிர்வாகிகள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. கடந்த டிசம்பரில் தான் கீழ்மட்ட நிர்வாகிகளை நியமிக்கும் பணி தொடங்கியதால், இன்னும் பல பகுதிகளில் அது முழுமையடையவில்லை. இதனால் சிறிய ஊர்களில் கூட்டம் நடத்துவதற்கான போலீஸ் அனுமதி போன்ற பணிகளுக்கும் மாவட்ட செயலர்களே நேரடியாக செல்ல வேண்டிய சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
வேட்பாளர் தேர்விலும் அதிருப்தி ஏற்பட்டதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். விருப்ப மனுக்கள் பெறப்பட்டாலும், எத்தனை மனுக்கள் வந்தன என்ற விவரம் வெளியிடப்படவில்லை என்றும், விஜய் நேர்காணல் நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றும் கூறப்படுகிறது. தலைமை தேர்வு செய்த 115 பேரை மட்டும் விஜய் சந்தித்ததாகவும், வேட்பாளர் பட்டியல் வெளியான பின் பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல புதியவர்களுக்கும் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், நீண்ட காலமாக உழைத்த சிலர் மற்றும் மாவட்ட செயலர்கள் உள்ளிட்டோர் சீட் பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.



