சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்-க்கு, வி.சி.க. சார்ந்த வட்டாரங்களில் இருந்து ஆதரவு வெளிப்படுவதால், தி.மு.க. தரப்பில் இது புதிய சவாலாக பார்க்கப்படுகிறது.

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அ.தி.மு.க. ‘இரட்டை இலை’ சின்னத்தில் களமிறங்கியுள்ளார். அவருக்கு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்ததாகவும், திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், த.வெ.க.வை சேர்ந்த வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தனிப்பட்ட முறையில் பொற்கொடிக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-ல் கொலை செய்யப்பட்ட தனது கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கோரி நிற்பதாக கூறி, பொற்கொடி அனுதாப வாக்குகளை நாடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். வி.சி.க. தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும், வி.சி.க. நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பொற்கொடிக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகவும், இயக்குநர் ரஞ்சித் மற்றும் கானா பாடகர்கள் வழியாக வாக்குகளை திரட்ட முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருப்பதால், வன்னியர் சமூக வாக்குகளும் கணிசமாக பொற்கொடிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இதனால் தி.மு.க. தரப்பில் கவலை அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.