தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பெண்கள் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக போட்டியிடும் அமைச்சர், ஏப்.2 அன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், தொகுதியில் பல இடங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று மெஞ்ஞானபுரம் அருகே கல்விளை கிராமப் பகுதியில் பிரச்சார வாகனத்தில் சென்ற போது, 50க்கும் மேற்பட்ட பெண்கள் வாகனத்தை சூழ்ந்து கோஷமிட்டனர். கடந்த 25 ஆண்டுகளாக பல திட்டங்கள் கொண்டு வருவதாக கூறிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த வாகனம் அங்கிருந்து வேகமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பின்னால் சென்ற ஆதரவாளர்களை பெண்கள் விடாமல் விரட்டி, ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து “எங்களுக்கு பதில் சொல்லுங்கள்” என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து தி.மு.க. நிர்வாகி உமரி சங்கர் சமரச பேச்சு நடத்தி, தேர்தல் முடிந்ததும் கல்விளை கோவிலை முழுமையாக கட்டித் தருவதாக உறுதி அளித்தார். அதற்கு சில பெண்கள், “எங்கள் ஊர் கோவிலை நாங்களே கட்டிக் கொள்வோம்; நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்” என பதிலளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் குறுகிய நேரம் பரபரப்பு நிலவியது.




