ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நடந்த தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் டி.எம். அன்பரசன் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

குன்றத்தூர் பூந்தண்டலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், இளம்பெண்கள் “ஒரு நடிகர் மீது ஆசை வைத்துள்ளனர்” என்றும், அந்த நடிகர் யார் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது என்றும் கூறிய அவர், இதனால் ஓட்டு மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பூத் அளவில் 10 பெண்களை நியமித்துள்ளதாக கூறி, அவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பூத் வாரியாக வீடு வீடாக சென்று பெண்களை மட்டும் சந்தித்து, தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு செய்யப்பட்ட சாதனைகளை எடுத்துரைத்து ஓட்டு கேட்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பூத் கமிட்டியில் உள்ளவர்கள் ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை சந்தித்து ஓட்டு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஓட்டுகள் குறைந்தால் “சும்மா விடமாட்டோம்” என எச்சரித்த அவர், ஆறு மாதத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் வேலை செய்யாதவர்கள் கவுன்சிலராக வர முடியாது என்றும் தெரிவித்தார்.