நிலவைச் சுற்றி வர நான்கு விண்வெளி வீரர்களுடன் நாசா அனுப்பியுள்ள ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம், விண்வெளியில் மனிதர்கள் சென்ற மிக அதிக தூர சாதனையை எட்டும் நிலையில் உள்ளது.

1972-ல் ‘அப்போலோ-17’ மூலம் நாசா மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பியது. அதன் பின்னர் பல விண்கலங்கள் நிலவுக்கு சென்றாலும், மனிதர்களுடன் எந்த விண்கலமும் செல்லவில்லை.

53 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘ஆர்டெமிஸ்-2’ கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து புறப்பட்டது. இந்தப் பயணத்தில் நிலவில் தரையிறங்காமல், நிலவைச் சுற்றி வந்து பூமிக்குத் திரும்பும் திட்டம் உள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, நிலவுக்கான சுமார் 4 லட்சம் கி.மீ. தூரத்தில் பாதியை ‘ஆர்டெமிஸ்-2’ கடந்துள்ளது. நாளை காலை நிலவின் வட்டப்பாதையை அது எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் மனிதர்களுடன் சென்ற ‘அப்போலோ-17’ விண்கலம் 4.17 லட்சம் கி.மீ. தூரம் சென்று பூமிக்குத் திரும்பியது. ‘ஆர்டெமிஸ்-2’ இதையும் தாண்டி சென்று மீண்டும் திரும்பும் என்பதால், மனிதர்கள் விண்வெளியில் சென்ற மிக அதிக தூர சாதனையை அதன் வீரர்கள் பெற உள்ளனர். பயணத்தில் உள்ள அமெரிக்க வீரர் விக்டர் க்ளோவர், “பூமி மிகவும் சிறியதாக தெரிகிறது; நிலவு பெரிதாகிக் கொண்டிருக்கிறது,” என்று கூறினார்.