சட்டசபை தேர்தல் காலகட்டத்தில் தமிழக பா.ஜ.வில் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இந்த அறிவிப்பு குழப்பத்தை அதிகரிப்பதாகக் கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே நீண்ட இழுபறிக்குப் பிறகு மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கட்சி செயல்பாடுகள் ஒருவழியாக நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் அறிவிப்புடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேரம் நீண்டதாகவும், இறுதியில் பா.ஜ.க்கு 27 தொகுதிகள் என முடிவானதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது. மேலும் சில கட்சிகளுக்கு தாமரை சின்னம் வழங்கப்பட்டதால் எண்ணிக்கை 35 வரை சென்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரச்சார ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு பிரிவுகளுக்கு 22 மாநில செயலர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டதாக கட்சியினர் தெரிவித்தனர். அதில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவராக தாளை முத்தரசு, செயலராக விஜயகுமார், மருத்துவப் பிரிவு மாநில செயலராக அன்பரசன், வர்த்தகப் பிரிவு மாநில செயலர்களாக கிச்சா ரமேஷ் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உள்ளாட்சி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், அரசு தொடர்பு, அமைப்புசாரா தொழில், ஆன்மிகம்–கோவில் மேம்பாடு, மத்திய அரசு நலத்திட்டம், கூட்டுறவு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தமிழ் இலக்கியம்–தமிழ் வளர்ச்சி, கலை–கலாசாரம், நெசவாளர், பொருளாதாரம், தேசிய மொழிகள், விளையாட்டு, திறன் மேம்பாடு, தொழில்துறை வல்லுநர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் மாநில செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நியமனங்களுக்கு முன் யாரிடமும் கருத்துக் கேட்கப்படவில்லை என சில நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். தேர்தல் பணிகள் ஏற்கனவே உள்ள நிர்வாகிகளின் வழிகாட்டலில் நடைபெறும் நிலையில், திடீரென வந்த புதிய செயலர்கள் அதிகாரப் போட்டியை உருவாக்கக்கூடும் என்றும், இதனால் குழப்பமும் வருத்தமும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




