சென்னையில் வணிக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீக்கடைகள், சாலையோர உணவகங்கள், ஹோட்டல்கள் பலவற்றில் உணவுப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. டீ, காபி, வடை, பஜ்ஜி ஆகியவற்றின் விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது இட்லி, தோசை, பூரி, பொங்கல், ஆம்லெட், பரோட்டா, சாப்பாடு, பிரியாணி உள்ளிட்ட பல உணவுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் சமையல் காஸ் வரத்தில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக நாட்டில் வணிக காஸ் சிலிண்டர் கிடைப்பில் தட்டுப்பாடு உருவாகி, கள்ள சந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.5,000 வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் கிடைக்காததால் பல இடங்களில் உணவகங்கள் மெனுவை குறைத்துள்ளன; சில இடங்களில் மூடப்படும் நிலையும் உருவாகியுள்ளது. சில கடைகள் காலை நேரத்தில் மட்டும், சில கடைகள் மதிய நேரத்தில் மட்டும் இயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், காலை உணவில் பொங்கல், பூரி விற்பனை நிறுத்தப்பட்டு, மதியத்தில் சாப்பாட்டைத் தவிர்த்து கலவை சாதம் மட்டும் விற்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறிய ஹோட்டல்கள் மற்றும் கையேந்தி பவன்களில் விலை உயர்வு கணிசமாக உள்ளது. ரூ.10க்கு விற்கப்பட்ட இட்லி ரூ.15 ஆகவும், ரூ.15–20க்கு இருந்த கல் தோசை ரூ.30 ஆகவும் உயர்ந்துள்ளது. கலவை சாதங்கள் ரூ.40 இருந்து ரூ.60–70 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. முட்டை விலை குறைந்த நிலையிலும் ஆம்லெட் விலை உயர்த்தப்பட்டதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விலைகளை தன்னிச்சையாக உயர்த்துவதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வியாபாரிகள் தரப்பில், மார்ச் 13 முதல் விலை உயர்வு தொடர்வதாகவும், தட்டுப்பாடு நீடித்தால் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் ‘கிரில் சிக்கன்’, ‘சவர்மா’ போன்றவற்றின் விற்பனை சுமார் 70% வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.




