சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் தவெகவுடன் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகியும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் முதற்கட்டமாக ராகுல் அங்கு சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் தமிழகம் வருவார் என்றும் கூறினார்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலைத் தொடர்ந்து தொண்டர்களிடையே அதிருப்தி இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் பிரச்னை யாருக்கு சீட் கிடைத்தது என்பதல்ல; கடந்த 20 ஆண்டுகளாகவே காங்கிரசுக்கு 28–30 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் நிலை தொடர்வதே முக்கிய காரணம் என அவர் கூறினார். இதற்கு தீர்வாக காங்கிரசுக்கு “மரியாதை” கிடைக்கும் வகையில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை பெற முயன்றதாகவும், பேச்சுவார்த்தையை உவமையாக விளக்கி “ஒருபக்கம் சின்ன தோசையைப் பகிர்ந்து சாப்பிடுங்கள் என்றார்கள்; இன்னொரு பக்கம் கல்யாண விருந்துக்கு அழைத்தார்கள்” என்றும் கூறினார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் கட்சி தலைமை 28 இடங்களுக்கு சம்மதித்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் பாஜவுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும், மாநில மக்கள் மதச்சார்பற்ற ஆட்சியையே விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். கேரளாவில் அடுத்ததாக காங்கிரஸ் முதல்வர் வருவார் என்றும், புதுச்சேரியில் இடம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.




