புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை முன்னிறுத்தி முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2023 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையும் முடிந்த பிறகே அது அமலுக்கு வரும் என அரசு தெரிவித்திருந்தது.

தற்போதைய கணிப்புப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் 2027ல் தான் வெளியாகும் நிலையில், 2029 லோக்சபா தேர்தலுக்கு முன் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் படி லோக்சபா இடங்களின் எண்ணிக்கை 543ல் இருந்து 816 ஆக உயரக்கூடும் என்றும், திருத்தங்களை கொண்டு வர வரும் 16ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறி பிரதமர் மக்களை ஏமாற்றுகிறார் என குற்றம்சாட்டினார். மறுவரையறை அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய மாநிலங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்றும், தென் மாநிலங்களுடன் பஞ்சாப், ஹரியானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கை சார்ந்த நெருக்கடிகள் உள்ள நிலையில், போதிய பொதுவிவாதமின்றி மறுவரையறையை முன்னெடுத்துச் செல்வது கவனம் திருப்பும் முயற்சியாகும் என்றும் அவர் விமர்சித்தார்.