இன்று தேர்தல் நடந்தால் திமுகவை விட அதிமுக முன்னிலை பெறும் என தினமலர்–சாணக்யா கருத்துக்கணிப்பு கூறுகிறது. கணிப்பின் படி, அதிமுக வெற்றி பெறும் என 40% பேரும், திமுக வெற்றி பெறும் என 37% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு மார்ச் மாதத்தில் 70 தொகுதிகளில் 19,305 பேரிடம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் பகுதி முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என்ற கேள்விக்கு 11% பேர் “முழுமையாக நிறைவேற்றியது” என்றும், 67% பேர் “ஓரளவு செய்துள்ளது” என்றும், 22% பேர் “ஒன்றுமே செய்யவில்லை” என்றும் கூறியுள்ளனர். திமுக அரசுக்கு 10க்கு எத்தனை மதிப்பெண் என்றதில் 15% பேர் 10க்கு 10 எனவும், 59% பேர் பாதி மதிப்பெண் அளவிலும், 26% பேர் பூஜ்ஜியம் எனவும் பதிலளித்துள்ளனர்.
திமுக ஆட்சியில் ஊழல் நிலை குறித்து 54% பேர் “ரொம்ப அதிகம்” என்றும், 37% பேர் “ஓரளவு தான்” என்றும், 9% பேர் “ஊழலே இல்லை” என்றும் தெரிவித்துள்ளனர். திமுக பிரமுகர்கள் மீது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 44% பேர் “சரியானதுதான்” என்றும், 22% பேர் “அரசியல் பழிவாங்கல்” என்றும், 34% பேர் கருத்தில்லை என்றும் கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் செயல்பாடு குறித்து 54% பேர் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது எனவும், தவெக 18% மற்றும் நாம் தமிழர் 17% எனவும் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் செயல்பாட்டில் இபிஎஸ்-ஐ 64% பேர் தேர்வு செய்த நிலையில், சீமான் மற்றும் விஜய் தலா 18% பெற்றுள்ளனர். விஜயின் அரசியல் குறித்து 46% பேர் “பரவாயில்லை”, 35% பேர் “மோசம்”, 19% பேர் “சூப்பர்” என கூறியுள்ளனர்; இந்த தேர்தலின் பிரதான பிரச்னையாக 41% பேர் ஊழலை, 16% பேர் “மத்திய அரசு அடாவடி”யை, 43% பேர் பிற காரணங்களை குறிப்பிட்டுள்ளனர்.




