திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த வாசகர் ஒருவர், அதிகாரிகள் செய்த ஆன்லைன் நிலப் பதிவுப் பிழையால் தனது சொத்தைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
அவரது நிலத்தின் உட்பிரிவு எண் “1சி” என்றும், கிராம நிர்வாக அலுவலக ஆவணங்களில் அது சரியாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஆன்லைன் எப்.எம்.பி. பதிவேற்றத்தில் தவறுதலாக “1பி” என பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்த பிழையை திருத்த பலமுறை மனு அளித்தும் ஆன்லைன் பதிவில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இதனால் தாசில்தாரை அணுகியபோது, ரூ.13,000 கொடுத்தால்தான் மாற்ற முடியும் என கூறியதாகவும், தாம் வெளியூரில் வசிப்பதால் வேறு வழியின்றி சொத்தைப் பாதுகாக்க அந்த தொகையை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வாசகர் குற்றம்சாட்டுகிறார்.
அதிகாரிகள் செய்த தவறால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அவர்களது கடமை என்றும், தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் தன்னிடமிருந்து பணம் பறிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.




