உலகளவில் பயன்படுத்தப்படும் கிரீன்விச் சராசரி நேரம் (ஜிஎம்டி) என்பதற்கு மாற்றாக, உஜ்ஜைனியை மையமாகக் கொண்ட ‘மஹாகால் நேரம்’ என்ற புதிய நேரத் தரநிலையை உருவாக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ‘மஹாகால்’ (காலத்தின் தலைவன்) என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கில் அவர் இதை தெரிவித்தார்.

உஜ்ஜைனி ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாக இணையும் இடம் என்றும், இங்கு காலக் கணக்கீடு மதச் சடங்காக மட்டும் இல்லாமல் அறிவியல் அடிப்படையிலும் வளர்ந்ததாகவும் அவர் கூறினார். காலம் மற்றும் வானியல் தொடர்பான பாரம்பரிய அறிவை எடுத்துக்காட்டும் வகையில் ‘சூர்ய சித்தாந்தம்’ போன்ற நூல்களையும் அவர் குறிப்பிட்டார்.

நேரமும் வானியலும் நெருங்கிய தொடர்புடையவை என கூறிய பிரதான், உஜ்ஜைனியை வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் அறிவியல் மையமாகவும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் பழங்காலத்தில் சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு காலம் கணக்கிடப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

ஜிஎம்டியை விட நம் முன்னோர் வகுத்த காலக் கணக்கீடு துல்லியமானது என கூறிய அவர், ‘மெக்காலே மனநிலை’யிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்றும், காலனி ஆதிக்க கல்விக் கொள்கைகளை புறந்தள்ளி பாரம்பரிய விஞ்ஞானக் கல்விக்குத் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பூமத்திய ரேகையும் கடக ரேகையும் சங்கமிக்கும் இடமாக உஜ்ஜைனியை குறிப்பிட்டு, ‘மஹாகால் நிலையான நேரம்’ என்ற உலகளாவிய தரநிலையை உருவாக்கினால் இந்தியாவின் அறிவியல் பாரம்பரியத்திற்கு உலகளவில் பெருமை கிடைக்கும் என்றார்.

இதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி விமர்சனம் தெரிவித்தார். நகரங்கள், சாலைகளின் பெயர்களை மாற்றுவதே பா.ஜ.க.வின் வளர்ச்சி என குற்றம்சாட்டிய அவர், நேரக் கணக்கீட்டை மாற்றுவதோடு ஏன் நிறுத்த வேண்டும் என கேலி செய்து, மொபைல் போன்களை தூக்கி எறிந்து எண்ணெய் விளக்குகளுக்கு திரும்பலாம் என பரிகாசமாக கூறினார்.