புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், புதுச்சேரிக்கு அடிக்கடி வராதது தவறு என கூறி, டெல்லியிலிருந்து “ரிமோட் கன்ட்ரோல்” மூலம் நிர்வாகம் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். புதுச்சேரி மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் அரசு இல்லை என்றும், துணைநிலை ஆளுநர் மூலம் மாநிலம் இயக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை, தொழில்துறை நசுக்கப்படுகிறது என கூறிய ராகுல், காரைக்கால் துறைமுகம் உள்ளிட்ட சொத்துகள் அதானிக்கு தாரைவார்க்கப்படுவதாகவும், மின்வாரியத்தையும் விற்க முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். போலி மருந்துகள் தயாரிப்பு அதிகரிப்பதாகவும், அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஒப்பந்தங்களில் கமிஷன் பெறப்படுவதாகவும், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுவதால் சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார். மேலும், கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, புதுச்சேரியை “மண்ணின் மைந்தர்கள்” ஆள வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளாக வேலை இல்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, அரசு-தனியார் துறைகளில் 30,000 வேலைவாய்ப்புகள், புதுச்சேரி பஸ்களில் மகளிருக்கு இலவசப் பயணம், அரசு வேலை வயது உச்சவரம்பை 40 ஆக உயர்த்தல், குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வரை மருத்துவ காப்பீடு ஆகியவற்றையும் அவர் பட்டியலிட்டார்.