ராணிப்பேட்டை வேட்பாளர் விவகாரத்தில் புதிய திருப்பம்

2026 சட்டசபைத் தேர்தலுக்கான ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் தேர்வில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வினோத் காந்தி, தாம் போட்டியிடவில்லை என்றும், தந்தையும் கைத்தறித்துறை அமைச்சருமான ஆர்.காந்தியே மீண்டும் போட்டியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

தகவலின்படி, இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் அமைச்சர் ஆர்.காந்தியும் ஒருவர். அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை தொகுதியில் மகன் வினோத் காந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அமைச்சர் அதிருப்தியில் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இதன் பின்னணியில் வினோத் காந்தி பிரசாரத்தை தொடங்காமல் இருந்ததாகவும், அமைச்சர் மீண்டும் ராணிப்பேட்டையில் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என திமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

வினோத் காந்தி வெளியிட்ட அறிக்கையில், தன்னை நம்பி வாய்ப்பு அளித்த தலைமைக்கும், உதயநிதிக்கும் நன்றி தெரிவித்தார். ஆனால், தந்தை மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, அந்த வாய்ப்பை மரியாதையுடன் அவருக்கே மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்ததாக கூறினார்.

இந்நிலையில், வினோத் காந்தியின் அறிவிப்பின்போதும், ராணிப்பேட்டை வேட்பாளர் மாற்றம் குறித்து திமுக தலைமையிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.