சென்னை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி நீக்கப்பட்ட பல நிர்வாகிகளை தமிழக பா.ஜ. மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது. சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதில், முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்த ஏ.என். பிரசாதும் இடம்பெறுகிறார். தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என்று கூறி வந்த நிலையில், த.வெ.க. பா.ஜ. கூட்டணியில் இணைய வேண்டும் என்று பிரசாத் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மாதம் அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது பா.ஜ. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய விருப்பம் தெரிவித்ததும், மன்னிப்பு கடிதம் அளித்ததுமாக கூறி, பிரசாத் மீதான நீக்கத்தை ரத்து செய்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் பிரசாத் இதை மறுத்துள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மன்னிப்பு கடிதம் காரணமாக மீண்டும் பொறுப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டதாகவும், தாம் கட்சி தலைவருக்கு எந்த மன்னிப்பு கடிதமும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். தலைமையின் திடீர் முடிவும் தற்போதைய அறிவிப்பும் தமக்கு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு அமைப்பாளராக உள்ள சென்னை சிவா உள்ளிட்ட, முன்பு நீக்கப்பட்ட பல நிர்வாகிகளும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



