தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடைசி நாளான திங்கள்கிழமை, தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் பரபரப்பு அதிகரித்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த தேர்தல் ஏப். 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகளில் இடம் கிடைக்காத சில கட்சிகள் தனித்தனியாகவும், கூட்டணியாகவும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கியது.

மொத்தம் 234 தொகுதிகளுக்காக இதுவரை 3,430 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வேட்பாளர்களிடமிருந்து 2,731 மனுக்களும், பெண் வேட்பாளர்களிடமிருந்து 698 மனுக்களும் வந்துள்ளன. கடைசி நாளானதால் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் களைகட்டியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 வேட்பாளர்களுக்கான மனுக்களையும், அதிமுக கூட்டணியில் பாஜ 27 வேட்பாளர்களுக்கான மனுக்களையும் தாக்கல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

சாத்தூர் தொகுதியில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். கோவை வடக்கு தொகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு தாக்கல் செய்தபோது ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மற்றும் அண்ணாமலை உடனிருந்தனர். அவிநாசி தொகுதியில் மத்திய அமைச்சர் எல். முருகன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் சென்று மனு தாக்கல் செய்தார்.

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன் எடப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். செல்லூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர். மேலும் திமுக மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பிற்பகல் 3 மணிக்கு முன் வரும் அனைவருக்கும் டோக்கன் வழங்கி, எவ்வளவு நேரமானாலும் மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படும்; 3 மணிக்குப் பிறகு வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.