வாஷிங்டன்: ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பது அமெரிக்காவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல துறைகளில் விலை அழுத்தம் உருவாகும் சூழல் காணப்படுகிறது.
தகவலின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது போர் நடத்தி வருகின்றன; ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நீடிக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் உயர்ந்துள்ளது.
இதன் பிரதிபலிப்பாக அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல் விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளிலும் செலவுகள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தச் சூழலில், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஏப்.17 முதல் விலைப்பட்டியலில் 3.50% எரிபொருள் கூடுதல் கட்டணத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளது. அதேபோல், அமெரிக்க அஞ்சல் துறை பார்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் மெயில் டெலிவரிகளுக்கு தற்காலிகமாக 8% எரிபொருள் கூடுதல் கட்டணம் விதிக்க அனுமதி கோரியுள்ளது.
அனுமதி கிடைத்தால், அந்தக் கட்டணம் ஏப்.26 முதல் அடுத்தாண்டு ஜன.17 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து செலவுகள் தொடர்ந்து உயர்ந்தால், அது பிற பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.




