துபாய்: ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க எப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானத்தில் இருந்த ஒரு விமானியை, ஈரான் எல்லைக்குள் நுழைந்து 48 மணி நேரத்துக்குள் மீட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
தகவலின்படி, ஏப். 3 அன்று தெற்கு ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் ஏவுகணை தளங்களை தாக்கும் பணிக்காக அந்த விமானம் பறந்தபோது, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் அதை சுட்டு வீழ்த்தினர். விமானத்தில் இருந்த இருவரும் அவசர வெளியேறும் அமைப்பை பயன்படுத்தி தப்பினர்; ஒருவரை சில மணி நேரங்களிலேயே மீட்ட நிலையில், மற்றவர் காயங்களுடன் மலைப்பாங்கான பகுதியில் தனியாக சிக்கி, ஈரான் படைகள் மற்றும் உள்ளூர் பழங்குடியினரிடமிருந்து மறைந்து இருந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க விமானப் படை வீரரை பிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்ததால் தேடுதல் தீவிரமானது. இதை திசைதிருப்ப, இரு விமானிகளும் ஏற்கனவே மீட்கப்பட்டு தரை வழியாக வெளியேற்றப்பட உள்ளனர் என்ற வகையில் சி.ஐ.ஏ. ஒரு பொய் பிரச்சாரத்தை உடனடியாக பரப்பியதாக செய்தி கூறுகிறது; இதனால் தேடல் திசை மாறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் செயற்கைக்கோள், ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் உளவு தகவல்கள் மூலம் சிக்கியிருந்த விமானியின் சரியான இருப்பிடத்தை அமெரிக்க படைகள் கண்டறிந்தன. அதே இரவில் குறைந்த உயரத்தில் பறந்து ரேடார்களைத் தவிர்க்கும் வகையில் பல அமெரிக்க விமானங்கள் ஈரானுக்குள் சென்றதாகவும், எப்-35 விமானங்கள் ரேடார்/ஏவுகணை தளங்களை கண்காணித்ததாகவும், ஏ-10 விமானங்கள் பாதுகாப்பு வழங்கியதாகவும், எச்.சி.-130 விமானம் ஹெலிகாப்டர்களுக்கு எரிபொருள் ஆதரவு அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.எச்.-60டபிள்யூ “ஜாலி க்ரீன்” ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், டெல்டா, சீல் உள்ளிட்ட சிறப்பு படையினரும் இரவில் தரை வழியாக அந்த பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. ஈரான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது ஏ-10 விமானங்கள் பதிலடி கொடுத்து பாதுகாப்பை உறுதி செய்ததாகவும், காயமடைந்த விமானியை கயிறு மூலம் ஹெலிகாப்டருக்கு ஏற்றி வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் உயிரிழப்பு இல்லை என அமெரிக்க ராணுவம் கூறியுள்ள நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் விமானி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.




