பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா ஆதரவு கேட்டால், அவர் போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் இருந்து தங்கள் கூட்டணி வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

சேலத்தில் த.வா.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 தொகுதி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரியில் சவுமியாவை எதிர்த்து வேட்பாளர் நிறுத்த நிர்ப்பந்தித்ததாலேயே தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்ததாக கூறினார்.

சவுமியா ‘பசுமை தாயகம்’ அமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் தொடர்பான உதவிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், “அவர் தரப்பில் இருந்து ஆதரவு கேட்டால், அவர் போட்டியிடும் தொகுதியில் இருந்து எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவோம்” என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

மேலும், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உள்ளிட்ட சில கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்கள் கூட்டணி அவர்களை எதிர்த்து போட்டியிடாது என்றும் கூறினார்.

சவுமியாவை எதிர்த்து போட்டியிட நிர்ப்பந்தித்ததாக கூறியதற்கு ஆதாரம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டபோது, அறிவாலயத்தில் தி.மு.க.வை சேர்ந்த மூத்த அமைச்சர் இதை கூறியதாகவும், அப்போது அங்கு இருந்த அருள் இதற்குச் சாட்சியெனவும் அவர் தெரிவித்தார்.