சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது தி.மு.க.வை “வீழ்த்தும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நீதி கிடைக்காததை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக சித்தரிப்பதாக தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டியும் பட்டியலின மக்கள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளதாக கூறினார்.
வேங்கைவயல் மக்கள் கடந்த லோக்சபா தேர்தலையும் புறக்கணித்ததாகவும், அதற்குப் பிறகும் நீதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். இது பட்டியலின மக்களை அலட்சியமாக பார்க்கும் அணுகுமுறையைக் காட்டுகிறது என்றார்.
மேலும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் நீதி கேட்டு போராடாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நிற்கின்றன என விமர்சித்தார். பட்டியலின மக்களின் கோபத்தை பிரதிபலிக்கும் இந்த புறக்கணிப்பு தி.மு.க.க்கு எதிரான எதிர்வினையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



