சென்னை: பெரம்பூர் சட்டசபைத் தொகுதிக்கான பிரமாணப்பத்திரத்தை தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் மீண்டும் தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனு ஆவணங்களில் இது மூன்றாவது முறையான திருத்தமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்; இரு தொகுதிகளுக்கும் அவர் ஏற்கனவே வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த ஆவணங்களில் இடம்பெற்ற தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக கூறப்படுகிறது.
பெரம்பூர் மனுவில் தம்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு மனுவில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இரு மனுக்களிலும் வயது விவரம் வேறுபட்டதாகவும், இதனால் திருத்தம் செய்யாவிட்டால் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, பெரம்பூர் தேர்தல் அதிகாரியிடம் தவெக வக்கீல்கள் திருத்த மனுக்கள் அளித்தனர்; பின்னர் திருத்தப்பட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் மதுரை மாநாட்டில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விவரங்கள், கொளத்தூரில் பிரசாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படும் வழக்கு விவரங்கள், ரூ.6 கோடி மதிப்புள்ள பிரசார வாகனம் உள்ளிட்ட தகவல்கள் மற்றும் வயது தொடர்பான விவரங்களும் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் நெருங்கிய நிலையில், முன்பு விடுபட்ட தகவல்கள் அனைத்தும் உள்ளடக்கிய புதிய பிரமாணப்பத்திரம் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விஜய் நேரில் சென்று சமர்ப்பிக்காமல், பெரம்பூர் தவெக மாவட்ட செயலாளர் சிவா தேர்தல் நடத்தும் அதிகாரி கீதாவிடம் வழங்கியுள்ளார்.




