தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரைச் சேர்ந்தவர்களை கொண்டு வந்து சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்ய வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூரில் ஒரே பகுதியைச் சேர்ந்த 18 பேரை கோவை தெற்கு தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்ய வைத்ததாக கூறினார். வேட்பாளர்கள் என்ற போர்வையில் “அடியாட்களை” இறக்கி உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

கரூரைச் சேர்ந்த 18 சுயேச்சைகள் போட்டியிடுவதை கோவையில் உள்ள “மானமுள்ள தி.மு.க.வினர்” ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறிய அண்ணாமலை, செந்தில் பாலாஜியை தி.மு.க.வினரே தோற்கடிப்பர் என்றும் தெரிவித்தார்.

மேலும், கரூரில் மாற்று வேட்பாளராக செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், அவர் அமலாக்கத் துறையால் தேடப்படுபவர் எனவும் கூறி, அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதே பேட்டியில், அந்நிய நன்கொடை சட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் பேசுகிறார் என குற்றம்சாட்டிய அவர், அந்தச் சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் என்றும் பல்வேறு பிரிவினரும் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறுகின்றனர் என்றும் கூறினார். மேலும், தனது பெயரில் போலி கடிதம் பரப்பப்படுவதாக கூறி, ஊடகங்கள் சரிபார்த்த பின் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், கடைசி இரண்டு வாரங்களில் தேர்தல் நிலை மாறக்கூடும் என்றும் தெரிவித்தார்.