காந்திநகர்: கேரளாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துகள் குஜராத் மற்றும் பிற மாநில மக்களை இழிவுபடுத்துவதாக பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கார்கே, கேரள மக்கள் படிப்பறிவு மிக்கவர்கள் என்றும், அவர்கள் “குஜராத் அல்லது பிற மாநில மக்களைப் போல அல்ல” என்றும் கூறினார். மேலும் அவர்களை திசைதிருப்பவும் ஏமாற்றவும் முடியாது என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த பா.ஜ.க தேசிய இளைஞரணி துணைத் தலைவரும் குஜராத் துணை முதல்வருமான ஹர்ஷ் சங்வி, இந்த பேச்சு குஜராத் மண்ணையும் அங்கு வாழும் மக்களையும் அவமதிப்பதாக குற்றம்சாட்டினார். நாட்டிற்கு மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், பிரதமர் மோடி உள்ளிட்டோரை வழங்கிய மாநிலம் குஜராத் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குஜராத் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என கேள்வி எழுப்பிய சங்வி, காங்கிரஸை குஜராத் மக்கள் தொடர்ந்து நிராகரித்துள்ளதாகவும், இனியும் நிராகரிப்பார்கள் என்றும் கூறினார். இத்தகைய கருத்துகளை குஜராத் மன்னிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.



