சென்னை: தேர்தல் நடைமுறைகள் காரணமாக, தமிழகத்தில் வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் பலர் பத்திரப்பதிவை தற்போது ஒத்திவைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 589 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. வழக்கமாக ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் குறைந்தபட்சம் 100 முதல் 200 வரை பத்திரங்கள் பதிவு செய்யப்படும்; முகூர்த்த நாட்களில் இது 50%க்கும் மேலாக அதிகரிக்கும்.

சொத்து விற்பனையில் ரொக்க பரிமாற்றத்துக்கு தடை இருந்தாலும், பல இடங்களில் சந்தை மதிப்பை அடிப்படையாக வைத்து விலை பேசப்பட்டு, ஒரு பகுதி தொகை ரகசியமாக கைமாறுவது வழக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்படுகிறது; இதனால் ரொக்கத்தை எடுத்துச் செல்ல வாங்குபவர்களும் விற்பவர்களும் தயங்குகின்றனர்.

இதன் காரணமாக, பத்திரப்பதிவை தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ளலாம் என பலர் முடிவு செய்து ஒத்திவைத்துள்ளனர். பதிவுத் துறை அதிகாரி ஒருவர், “பத்திரப் பதிவு மற்றும் ரொக்க பரிமாற்றத்துக்கு நேரடி தொடர்பில்லை; ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்த பின் பத்திரப் பதிவுக்கு வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது” என தெரிவித்தார்.

பல அலுவலகங்களில் ஓரிரு டோக்கன்கள் மட்டுமே எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பொதுவாக நிதியாண்டின் முதல் மாதத்தில் பத்திரப்பதிவில் சிறு தொய்வு இருக்கும்; தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு பதிவு செய்ய மக்கள் திட்டமிடுவார்கள். ஆனால் தேர்தல் நடைமுறைகளால் இந்தத் தொய்வு தற்போது அதிகரித்துள்ளதாக தெரிகிறது.