தமிழகத்தில் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தில் “மிகப்பெரிய ஊழல்” நடந்துள்ளதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் மற்றும் முதல்வருக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் உள்ளடக்கி விசாரணை நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிறுவன தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். மத்திய அரசின் பல திட்டங்கள் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஏழை மக்களுக்காக 9 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கியதாகவும், ஆனால் 3 லட்சம் பயனாளிகளுக்கு இதுவரை வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தால் சுமார் 13 லட்சம் பேர் துாய்மையான குடிநீர், கழிப்பறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுடன் பயன் பெற்றிருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு கிடைத்த வரி வருவாய், முந்தைய தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தை விட இருமடங்கு அதிகம் என கூறி, அந்த நிதி எங்கே சென்றது என்று கேள்வி எழுப்பினார். ஜல் ஜீவன் திட்டத்தில் ஒப்பந்தங்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்ததாக கூறப்படும் ஊழல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.