நாடு முழுவதும் போலீஸ் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டத்தின் அமலாக்க நிலை குறித்து, மத்திய உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கேமராக்கள் இல்லாமை அல்லது முறையாக இயங்காத நிலை குறித்து, உச்சநீதிமன்றம் தாமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், போலீஸ் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் இருக்க வேண்டும் என்று 2018-ல் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை நீதிமன்றம் நினைவூட்டியது. பெயருக்கு மட்டும் கேமரா அமைப்பது போதாது; அவை செயல்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அது வலியுறுத்தியது.

மேலும் 2020-ல், போலீஸ் நிலையங்களுடன் சேர்த்து சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களிலும் சிசிடிவி அவசியம் என கூறியிருந்தது. நிலைய நுழைவாயில், வெளியேறும் பகுதி, லாக்-அப் மற்றும் அதன் வெளிப்புறம், வரவேற்பறை போன்ற இடங்களில் கேமரா கட்டாயம் இருக்க வேண்டும்; இரவில் தெளிவாக காட்சியளிக்கும் வசதி, ஒலிப்பதிவு, ஒரு ஆண்டு வரை பதிவுகளை சேமிக்கும் வசதி ஆகியனவும் இருக்க வேண்டும் எனவும் உத்தரவுகள் குறிப்பிடப்பட்டன.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன் நடந்த சமீபத்திய விசாரணையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில கண்காணிப்பு கேமராக்கள் நாட்டின் காட்சிகள் மற்றும் தரவுகளை ரகசியமாக வெளிநாட்டுக்கு அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தையும் நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. இத்தகைய சீன கேமராக்களை போலீஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து அகற்ற மத்திய அரசு ஏதேனும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதா என கேள்வி எழுப்பியபோது, இதுவரை அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

முந்தைய முறை திட்டத்தின் கட்டமைப்பு மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க உயரதிகாரிகளை அனுப்பாததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், அடுத்த முறை செயலர் பதவிக்கு குறையாத அதிகாரியை அனுப்ப வேண்டும் என கூறியது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், மத்திய உள்துறை செயலர் நேரில் ஆஜராகி மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் செயல்படுத்தும் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.