அருணாச்சல பிரதேசத்தில் அரசு ஒப்பந்தங்கள் முதல்வர் பெமா காண்டுவின் குடும்பத்தினருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக எழுந்த புகாரில், சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.1,270 கோடி மதிப்பிலான பொதுப்பணித் துறை (PWD) ஒப்பந்தங்கள் முறையான டெண்டர் நடைமுறைகளை பின்பற்றாமல் வழங்கப்பட்டதாக மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வரின் மனைவி, தாய் மற்றும் உறவினருக்கு சொந்தமான நிறுவனங்கள் பயன் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் அடிப்படையில் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவில் ‘பிராண்ட் ஈகிள்ஸ்’, ‘அலையன்ஸ்’ உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டு, அவை முதல்வரின் தாய் ரின்சின் மற்றும் உறவினர் ஷெரிங் டாஷிக்கு சொந்தமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் நீதிபதி அஞ்ஜாரியா அமர்வு, கடந்த 10 ஆண்டுகளில் குடும்பத்தினருடன் தொடர்புடைய நான்கு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், தேவையெனில் அதற்கு முந்தைய ஆண்டுகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
மேலும், 16 வாரங்களுக்குள் முதற்கட்ட விசாரணை நிலை அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும்; முழுமையான குற்றவியல் விசாரணை தேவையா என்பதையும் அதில் தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.




