தமிழக சட்டசபை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் தே.ஜ. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் சவுமியா அன்புமணி, வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மொத்த சொத்து மதிப்பு ரூ.68.46 கோடி என தெரிவித்துள்ளார்.
பிரமாணப் பத்திர விவரப்படி, சவுமியா பெயரில் ரூ.2.25 லட்சம், கணவர் அன்புமணி பெயரில் ரூ.60,000, மகள் சஞ்சுத்ரா பெயரில் ரூ.20,000 ரொக்கம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சவுமியா பெயரில் ரூ.9.47 லட்சம் மதிப்பிலான ஹோண்டா ஜாஸ் மற்றும் ரூ.53.59 லட்சம் மதிப்பிலான பென்ஸ் கார் உள்ளிட்ட வாகனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
அவரது பெயரில் 2,927 கிராம் தங்க நகை, ரூ.1.64 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் 26.44 கிலோ வெள்ளி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கணவர் பெயரில் 960 கிராம் தங்கம், மகள் பெயரில் 551 கிராம் தங்கம், ரூ.4.34 லட்சம் மதிப்பிலான வைரம் மற்றும் 2.50 கிலோ வெள்ளி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த அசையும் சொத்துக்கள் ரூ.19.61 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேளாண்மை நிலம், வணிகக் கட்டிடம் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் ரூ.48.85 கோடி எனவும், அதில் அன்புமணி பெயரில் ரூ.6.85 லட்சம் மட்டுமே அசையா சொத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ.8.99 கோடி கடன் மற்றும் ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தர்மபுரியில் போட்டியிட்ட போது, அவரது மொத்த சொத்து ரூ.61.42 கோடி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளில் ரூ.7.04 கோடி உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



