இந்த ஆண்டு தொடங்கி 95 நாட்களில் தமிழகத்தில் 2,09,081 நாய்க்கடி பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் ரேபிஸ் நோயால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

மாநிலம் முழுவதும் 25 லட்சம் வரை தெரு நாய்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஓரளவு தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், கிராமப்புறங்களில் தடுப்பூசி அளிப்பு குறைவாக இருப்பதால் நகரங்களை விட கிராமங்களில் நாய்க்கடி பாதிப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் 6,25,700 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், ரேபிஸ் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டின் முதல் 95 நாட்களிலேயே பாதிப்பு எண்ணிக்கை உயர்வாக இருப்பது கவலை அளிப்பதாக கூறப்படுகிறது.

மாவட்ட வாரியாக சேலத்தில் 12,177 பேர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக திருச்சி 9,939, திருவள்ளூர் 9,265, திண்டுக்கல் 8,239, விழுப்புரம் 8,213 என பதிவாகியுள்ளது.

பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், நாய், பூனை, குரங்கு கடித்த காயங்களை கிருமிநாசினி கொண்டு முறையாக சுத்தம் செய்யாவிட்டால் தொற்று அபாயம் அதிகரிக்கலாம் என்றனர். தடுப்பூசி தவணைகளை தவற விடுதல் அல்லது தாமதப்படுத்துதல் ரேபிஸ் பரவலைத் தடுக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் எச்சரித்தனர். ஆழமான காயங்களுக்கு தடுப்பூசியுடன் சேர்த்து ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) செலுத்தலாம்; மேலும் முதல் நாள், 3-ம் நாள், 7-ம் நாள், 21-ம் நாள் என நான்கு தவணைகளில் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம், RIG மருந்து முதல் நாளிலேயே தடுப்பூசியுடன் சேர்த்து செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.