சென்னை: சாத்தான்குளம் காவல் நிலையக் காவலில் நடந்த மரண வழக்குத் தீர்ப்பின் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் இரும்புக் கம்பிகள், பிளாஸ்டிக் குழாய்கள் போன்றவை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மரண வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு காவல் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், பல்வேறு சம்பவங்களில் காவல் துறையினர் கொல்லப்பட்ட வழக்குகளில் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்பட்டனவா என்ற கேள்விகளும் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகள் கூறுகையில், சாத்தான்குளம் தீர்ப்பை முன்வைத்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும், ஒருவரை அடித்தே உண்மை பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் இந்தப் பணிக்குத் தகுதியற்றவர்கள் என்றும் தெரிவித்தனர். அறிவியல் ரீதியான புலனாய்வு முறைகள் முன்னேறிய நிலையில், தகவல் பெறுவதற்காக அடிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி.க்களின் கண்காணிப்பு இன்றி காவல் நிலையங்களில் யாரையும் விசாரிக்கக் கூடாது என்றும், இன்ஸ்பெக்டர் உத்தரவின்றி போலீசார் லத்தியை எடுக்கவே கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.




