சென்னை: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 1% சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை 21 மாதங்களாகியும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று திருநங்கையர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமூக நலத்துறை மூலம் ஓய்வூதியம் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டாலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற இடஒதுக்கீடு அவசியம் என்பதே தங்களின் முக்கிய கோரிக்கை என அவர்கள் தெரிவித்தனர்.

திருநங்கை மற்றும் திருநம்பி உள்ளிட்டவர்களை மூன்றாம் பாலினமாக சட்டரீதியாக அங்கீகரித்து, மாநிலங்கள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை செயல்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமிழகத்தில், 2024ல் சென்னை உயர்நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 1% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி, மூன்று மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தீர்ப்பை சமூக நலத்துறை அதிகாரிகள் செயல்படுத்தாமல் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த திருநங்கை ரக்ஷிதா ராஜ், தீர்ப்பு வெளியாகி நீண்ட காலமாகியும் தி.மு.க. அரசு அதை செயல்படுத்தவில்லை என்றும், தேர்தலை முன்னிட்டு வாக்குகளை ஈர்க்கும் அறிவிப்புகள் வெளியிடப்படுவது வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.