சென்னை: ஓசூர் மற்றும் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) வேட்பாளர்கள் திடீரென மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது. கடந்த மார்ச் 29-ஆம் தேதி கட்சித் தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிவித்த போது, ஓசூருக்கு அம்ப்ரிஷ், ஊத்தங்கரை (தனி) தொகுதிக்கு குமரவேல் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஓசூரில் அம்ப்ரிஷ் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவருக்கு பதிலாக வேந்தர்கரசன் என்பவர் த.வெ.க. பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் ஊத்தங்கரையில் குமரவேலுக்கு பதிலாக இளையராஜா, ரமேஷ் ஆகிய இருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மாற்றம் குறித்து கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், இரு தொகுதிகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் பிற தொகுதிகளிலும் இதுபோன்ற மாற்றங்கள் நடந்துள்ளதா என்பது தெளிவாக இல்லாததால், த.வெ.க. நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.