எரிபொருள் விலை உயர்வால் கட்டண மாற்றம்

மேற்காசியாவில் நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலையை மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா டிக்கெட் கட்டணங்களில் மாற்றம் செய்துள்ளது. செயல்பாட்டு செலவுகள் அதிகரித்ததன் தாக்கத்தை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் இரட்டிப்புக்கு அருகில் சென்ற விலை

அறிக்கையின்படி, உலகளவில் விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி இறுதியில் பேரல் ரூ.9,250 ஆக இருந்தது, மார்ச் இறுதியில் ரூ.18,162 ஆக உயர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமான நிறுவனங்களின் மொத்த செலவில் 40%–45% வரை எரிபொருளுக்கே செலவாகும் என்பதால், விலை உயர்வு நிறுவனங்களுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

ஏர் இந்தியா: எரிபொருள் கூடுதல் கட்டணம் 25% வரை உயர்வு

ஏர் இந்தியா எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 25% வரை உயர்த்தியுள்ளதாக அறிவித்து, பயணத் தூரத்தின் அடிப்படையில் உள்நாட்டு கட்டணங்களை இன்று முதல் மாற்றியுள்ளது. 500 கி.மீ. வரை பயணங்களுக்கு ரூ.299 கூடுதல் கட்டணமும், 2,000 கி.மீ.க்கு மேற்பட்ட உள்நாட்டு நீண்டதூர பயணங்களுக்கு அதிகபட்சம் ரூ.899 கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சர்வதேச பயணங்களில் கூடுதல் சுமை

சர்வதேச பயணங்களில் சார்க் நாடுகளுக்கு ரூ.2,232 வரை, ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ.19,605 வரை எரிபொருள் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நீண்டதூர நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த கூடுதல் கட்டணம் ரூ.26,040 வரை உயரக்கூடும்.

அமல்படுத்தும் தேதி

பெரும்பாலான பாதைகளுக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும், ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நீண்டதூர பாதைகளுக்கான உயர்வு நாளை மறுதினம் முதல் அமலாகும் என்றும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.