பா.ஜ. மேலிடத்திலிருந்து வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ. முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை இரவு திடீரென டில்லி புறப்பட்டார்.

அண்ணாமலை புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், பா.ஜ. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். மேலிட அழைப்பைத் தொடர்ந்து அவர் ஹெலிகாப்டரில் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை சென்னை விமான நிலையம் வந்தார்.

அதன்பின், இரவு சுமார் 7.20 மணியளவில் தனி விமானத்தில் டில்லி நோக்கி புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பயணம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே நடந்ததாகவும், கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், காரைக்காலில் பிரசாரத்திற்காக அண்ணாமலை பயன்படுத்திய ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை சோதனை செய்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.