நிலவில் தரையிறங்காமல் மிக நெருக்கமாகச் சுற்றி ஆய்வு செய்யும் நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீரர்கள் நிலவை நோக்கி அனுப்பப்பட்டுள்ளனர்.
நான்கு வீரர்களை ஏற்றுக் கொண்ட விண்கலம், ஏப்ரல் 1 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை நிலவின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து, நிலவின் மேற்பரப்பை மிக நெருக்கமாகக் கடந்து சென்றது.
இந்த பறப்பில் மனித வரலாற்றில் இதுவரை யாரும் சென்றிராத அதிகபட்ச தூரத்தை வீரர்கள் எட்டியதாக நாசா தெரிவித்தது. நிலவுக்கு 6,545 கி.மீ. வரை நெருங்கியதுடன், பூமியிலிருந்து 4,06,778 கி.மீ. தூரம் சென்றது. இதனால் 1970-ம் ஆண்டு அப்பல்லோ-13 திட்டத்தின் 4,00,171 கி.மீ. என்ற சாதனை தூரம் முறியடிக்கப்பட்டது. மேலும், மனிதக் கண்களுக்கு இதுவரை அறிமுகமில்லாத வகையிலான படங்களையும் அவர்கள் அனுப்பியதாக கூறப்பட்டது.
விண்கலம் நிலவின் மறுபக்கத்திற்குச் சென்றபோது பூமியுடனான தகவல் தொடர்பு 42 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 4:13 மணிக்கு சிக்னல் இழக்கப்பட்டு, 4:55 மணிக்கு மீண்டும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது; அந்த இடைவெளி கண்காணிப்பு குழுக்களுக்கு பதற்றமான நேரமாக இருந்தது.
நிலவைச் சுற்றி சுமார் ஏழு மணி நேரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வீரர்கள், இரண்டு புதிய பிரகாசமான பள்ளங்களை கண்டறிந்து பெயர் சூட்டியதாக தெரிவித்தனர். மேலும், நிலவு சூரியனை தற்காலிகமாக மறைக்கும் மொத்த சூரிய கிரகணக் காட்சியையும், நிலவின் மறுபக்கத்திலிருந்து காணப்பட்ட சூரிய உதயத்தையும் அவர்கள் விவரித்தனர்.




