சபரிமலை வழிபாட்டு விவகாரம் மத நம்பிக்கையும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு நடைமுறைகளும் தொடர்புடையது; எனவே அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று வாதிட்டது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 48 நாள் விரதம் உள்ளிட்ட குறிப்பிட்ட நியமங்களுடன் யாத்திரை மேற்கொள்ளும் பாரம்பரியம் உள்ளது. அங்கு 10 வயதுக்குட்பட்ட சிறுமியரும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தரிசிக்க அனுமதி அளிக்கப்படும் நிலையில், 10–50 வயது பெண்களுக்கு கட்டுப்பாடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.

இந்த நடைமுறை பாலின சமத்துவம் மற்றும் மத சுதந்திரத்திற்கு எதிரானது எனக் கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2018ல் உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்க உத்தரவிட்டது. அதற்கு எதிராக சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 2019ல் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை ஒன்பது பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.

ஒன்பது பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணை வந்தபோது, மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, மத நம்பிக்கைகளை பகுத்தறிவு அல்லது அறிவியல் அடிப்படையில் சோதிக்கக் கூடாது என்றும், நம்பிக்கையையும் குறிப்பிட்ட பிரிவின் தன்னாட்சி அதிகாரத்தையும் சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிட்டார். மேலும், அரசியல் சாசனத்தில் உள்ள “அறநெறி” என்ற சொல்லை “அரசியல் சாசன அறநெறி” என விரிவுபடுத்துவது நீதித்துறை மீறலாகவும், அரசியல் சாசன திருத்தத்திற்கு ஒப்பானதாகவும் இருக்கும் எனக் கூறினார்.

வாதங்களை விரைவில் முடிக்க வேண்டும்; கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என்று அமர்வு தெரிவித்ததுடன், வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.22க்கு ஒத்திவைத்தது.