சென்னை: அதிகார வரம்புக்குள் உள்ள நேரடி மேலதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோட், போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பணிகளை மதிப்பாய்வு செய்ய, மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆன்லைன் வழியாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வி.ஐ.பி. தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவது காவல்துறையின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சில எஸ்.பி.க்கள் பிற அதிகாரிகள் கூறும் உத்தரவுகளை பின்பற்றுவதாக தகவல் வருவதாகக் குறிப்பிட்டு, இதுபோன்ற நடைமுறையில் யாரும் ஈடுபடக்கூடாது என்றார். அதிகார வரம்பை மீறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், சட்டம்-ஒழுங்கு மற்றும் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கு தலைமை வகிக்கும் அதிகாரிகள் அதை தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.




