சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள திக தலைவர் கி.வீரமணிக்கு, பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில் நகரங்களில் பிரசாரம் செய்ய திமுக தலைமை கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிக்கையின் படி, அவரது பேச்சுகள் பக்தர்களின் மனதைப் புண்படுத்தக்கூடும் என்ற காரணத்தால், திமுக வேட்பாளர்கள் பலரும் அவரை மேடையில் பேச விட விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, பெயரளவுக்கு மட்டுமே சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய அனுமதி அளித்து, முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான பகுதிகளில் அவரைத் தவிர்க்கும் வகையில் திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தொகுதிகளிலும் அவருக்கு பிரசாரம் செய்ய அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் கும்பகோணம், பழனி, ஸ்ரீரங்கம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட கோவில் நகரங்களும் அவரது பயணத் திட்டத்தில் இடம்பெறாது என தகவல்.
இதேபோல் திமுக ஆதரவாளராக குறிப்பிடப்படும் சுப வீரபாண்டியனின் பிரசார பயணத் திட்டமும் வெளியாகியுள்ள நிலையில், அதிலும் பிரபல கோவில் நகரங்கள் இடம்பெறவில்லை என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.




