தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தத்தை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக சாய்குமார் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்.23-ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் நியாயமாக நடைபெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஒரே பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்கள் மற்றும் புகாருக்குள்ளான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தலைமைச் செயலர் மட்டத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார்.