ஆமதாபாத்–மும்பை வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு பரிமாறப்பட்ட உணவில் பூச்சி இருந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த உணவை தயாரித்த ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி (இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிர்வாகம்) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் ஆமதாபாதில் இருந்து மும்பைக்கு சென்ற வந்தே பாரத் சேவையில் நடந்ததாக கூறப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த ஆதித்யா என்ற பயணி, தமக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சி இருப்பதை கண்டதாகவும், அதற்கான புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பதிவில், தமது பெட்டியில் இதேபோன்று குறைந்தது இரண்டு சம்பவங்கள் நடந்ததாகவும், இதனால் பயணிகள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உணவு ஆர்.கே. குழுமத்தின் ஒரு பகுதியாக கூறப்படும் ‘பிராண்டவன் புட் ப்ராடக்ட்ஸ்’ என்ற ஒப்பந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்து, சமையலிடத்தில் ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஐஆர்சிடிசி, தரமற்ற உணவு பரிமாறியதற்காக ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தது. மேலும் முழுமையான சுத்தம் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக சமையலறை சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.




