கேரள சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இளம் வாக்காளர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்களை நோக்கி விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட குறும்பட இசை வீடியோ மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர், திருவனந்தபுரம் கலெக்டர் அனு குமாரி, உதவி கலெக்டர் சிவசக்திவேல், ஓட்டுச்சாவடி பணியாளர்கள் உள்ளிட்டோர் இசைக்குழுவுடன் கடற்கரை ஓரத்தில் நடனமாடி பங்கேற்றுள்ளனர்.
1 நிமிடம் 33 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், ஒவ்வொரு ஓட்டின் மதிப்பையும் வலியுறுத்தும் வகையில் ‘ஒரே ஒரு ஓட்டு ஆட்டத்தையே மாற்றி அமைக்கக்கூடும்; ஒரே ஒரு ஓட்டு விதியையே மாற்றி எழுதக்கூடும்’ போன்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கொச்சியில் சமீபத்தில் வெளியிட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கேரளாவின் 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது; வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. முதன்முறை வாக்காளர்களுக்கு ‘அல்வா’ வழங்குவது போன்ற முன்னெடுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில், ஓட்டுச்சாவடிகளில் இருந்து 2 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கு ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல ‘ஊபர்’ நிறுவனம் இலவச பயண சேவையை வழங்க உள்ளது.




