திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ், தனது வேட்புமனுவில் ரூ 1,049.56 கோடி மதிப்பிலான சொத்துகளை அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தலில் அதிக சொத்து கணக்கு காட்டிய வேட்பாளராக அவர் குறிப்பிடப்படுகிறார்.
பிரபல லாட்டரி வியாபாரி மார்ட்டினின் மனைவி என அறிமுகப்படுத்தப்படும் லீமா ரோஸ், 164 பக்கங்கள் கொண்ட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தன் பெயரிலும், கணவர் மற்றும் திருமணமாகாத மகன் பெயர்களிலும் உள்ள சொத்து விவரங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
அறிவிப்பின்படி, ரூ 26.29 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ 15.48 கோடி மதிப்பிலான வைரங்கள், ரூ 3.29 கோடி மதிப்பிலான வெள்ளி மற்றும் ரூ 1.84 கோடி மதிப்பிலான பிளாட்டினம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள் ரூ 909.94 கோடி என்றும், அசையும் சொத்துகள் ரூ 139.62 கோடி என்றும் குறிப்பிடப்பட்டு, மொத்த சொத்து மதிப்பு ரூ 1,049.56 கோடியாக உள்ளது.
அதே வேட்புமனுவில், கணவர் மார்ட்டின் பெயரில் ரூ 3,262 கோடி அசையா சொத்துகளும், ரூ 887.36 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாகவும், மகன் ஜோஸ் டெய்சன் மார்ட்டின் பெயரில் ரூ 437 கோடி அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




