சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் (மநீம) போட்டியிடாமல் விலகியதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெற்ற விருப்ப மனு கட்டணத்தை திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பிய கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து கட்டணத்தையும் செலுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் கட்சி தேர்தலில் போட்டியிடாததால் கட்டணத்தை திருப்பித் தருமாறு விண்ணப்பித்தவர்கள் கோரினர். ஆனால், அந்த தொகை கட்சி நிதியாகக் கருதப்படும்; திருப்பித் தர முடியாது என நிர்வாகிகள் தெரிவித்ததாகவும், இதனால் சர்ச்சையும் அதிருப்தியும் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இதுகுறித்து கட்சியின் தலைமை நிலையச் செயலர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில், விருப்ப மனு தாக்கல் செய்து கட்டணம் செலுத்தியவர்கள் ஏப்.8 முதல் ஏப்.16 வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேரில் வந்து தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.




