பா.ம.க. உட்கட்சி பிரச்னை தொடர்பான சிவில் வழக்கு முடிவுக்கு வரும் வரை, கட்சியின் ‘மாம்பழம்’ தேர்தல் சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என, நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்தது.
இதற்கு முன், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாட்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதன்படி விசாரணை நடத்திய சென்னை உரிமையியல் நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகக் கூறி இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனை அணையலாம் என்றும் தெரிவித்திருந்தது.
அந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணைய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் முன் முறையீடு செய்யப்பட்டபோது, உரிய மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.




