சாத்தான்குளம் காவல் நிலைய மரணங்கள் தொடர்பான வழக்கில், இது “அருவருக்கத்தக்க குற்றம்” என்றும், தமிழக காவல்துறைக்கே அவமானம் ஏற்படுத்தியதாகவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீர்ப்பின் நகல் தற்போது வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் இந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கு தூக்கு தண்டனை விதித்து, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.

தீர்ப்பில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவல் நிலையத்தில் தடுத்து வைத்தது சட்டவிரோதம் என்றும், கோபத்தில் பேசினார் என்பதற்காக பழிவாங்கும் நோக்கில் தாக்கி சித்ரவதை செய்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அவர்கள் நிராயுதபாணிகளாக இருந்த நிலையில் கட்டுப்படுத்தி தாக்கியதாகவும், இது மனித மாண்புக்கு முற்றிலும் முரணானதாகவும் கூறப்பட்டுள்ளது.

குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு, இந்த வழக்கு “அரிதிலும் அரிதான” வகைக்குள் வரும் என நீதிமன்றம் தெரிவித்தது. கைதிகளை அடிக்க போலீசாருக்கு உரிமை இல்லை என்றும், சட்டம் வழங்கிய அதிகாரத்தை பழிவாங்கும் நோக்கில் தவறாக பயன்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டியது.

மேலும், குறைந்தபட்ச தண்டனை வழங்குவது போன்ற அணுகுமுறை, மனித உரிமை மீறல்களை ஊக்குவிக்கும் தவறான செய்தியை உருவாக்கும் என நீதிமன்றம் எச்சரித்தது. அதே நேரத்தில், தமிழக காவல்துறையில் திறமையான, கடமைமிக்க அதிகாரிகள் பலர் உள்ளதாகவும், சிலரின் தவறு முழுத் துறைக்கே களங்கமாக மாறுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.