நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்களிக்கச் செல்லும் முன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எதிர்காலத்தை நினைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், தரமான கல்வி, நல்ல மருத்துவம், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமாறு பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூரில் நாதக வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரித்த போது அவர் இதை தெரிவித்தார். வெளிநாடுகளில் போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட கட்டமைப்புகள் எப்படி உள்ளன என்பதை நாம் பார்க்கிறோம்; ஆனால் நம் நாட்டில் ஏன் அதுபோல் இல்லை என அவர் கேள்வி எழுப்பினார். முதலீட்டை ஈர்க்க தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், அங்கு திடக்கழிவு மேலாண்மை, சாலை பராமரிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் எப்படி உள்ளன என்பதையும் குறிப்பிட்டார்.
வேலையின்மை குறித்து பேசும்போது, வளமுள்ள நாட்டிலிருந்து அரபு நாடுகளுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்குச் செல்லும் நிலை ஏன் உருவாகிறது என அவர் கேட்டார். தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் வேலை செய்யும் சூழலில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏன் கிடைக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். ஓட்டுக்கு பணம், இலவசப் பொருட்கள் போன்றவற்றால் மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டினார்.
கொத்தனார் வேலை, டீக்கடை நடத்துதல், கம்பி கட்டுதல், ஆடு-மாடு மேய்த்தல், விவசாயம் போன்ற உழைப்புகளை ‘இழிவு’ எனக் கற்பித்து மக்களை உழைப்பிலிருந்து விலக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார். ஊழல், லஞ்சம் நிர்வாகமாகிவிட்டால் பசி, பஞ்சம், ஏழ்மை, வேலையின்மை தவிர வேறு எதுவும் மிஞ்சாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் அறிவிப்புகள் வரும் நிலையில், உண்மையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை சேவைகள் தனியார் லாபத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் மீண்டும் மீண்டும் ‘வெற்று அறிவிப்புகள்’ தரும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதே சிக்கல் என்றும் விமர்சித்தார். இறுதியாக, “நாம் சாப்பிடும் உணவை தருவது விவசாயி” எனக் கூறி, விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறும், கல்வி, மருத்துவம், வேலை, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி வாக்கு செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.




