திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே 5 பேர் கொண்ட குழு வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதற்கு முன், மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தனி நீதிபதி உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கூறி தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தனர். அந்த அவமதிப்பு வழக்கை சார்ந்த மேல்முறையீட்டில் மார்ச் 17-ஆம் தேதி இடைக்காலத் தடை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சி தீபத்தூண் அருகே மலர் தூவி வழிபட 5 பேரை அனுமதிக்க வேண்டும் என மற்றொரு உத்தரவும் பிறப்பித்தார். அந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடுகள் ஏப்ரல் 8-ஆம் தேதி நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, 5 பேர் வழிபாடு அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.




