திருப்போரூர் தொகுதியில் வி.சி.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாக்காளர்களிடம் வேட்பாளரை எவ்வாறு முன்னிறுத்துவது என்ற கேள்வி பிரசாரத்தில் எழுந்துள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வட்டாரங்களின் தகவலின்படி, கூட்டணி ஒப்பந்தத்தில் வி.சி.க.க்கு ஆறு தனித் தொகுதிகளும், திருப்போரூர் மற்றும் பண்ருட்டி ஆகிய இரண்டு பொதுத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வன்னியர் சமூகத்தினர் அதிகமாக உள்ளதாக கூறப்படும் திருப்போரூர் தொகுதி கடந்த முறையும் வி.சி.க.க்கு கிடைத்ததாகவும், அப்போது வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். பாலாஜிக்கு திருமாவளவன் வாய்ப்பு அளித்ததால் பா.ம.க.வை தோற்கடிக்க முடிந்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இம்முறை பாலாஜிக்கு சீட் வழங்கப்படவில்லை.

இதற்கு பதிலாக பட்டியலினத்தைச் சேர்ந்த கிறிஸ்துவரான பன்னீர்தாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த முறை வன்னியர் வேட்பாளர் போட்டியிட்டதால், இம்முறையும் பல நிர்வாகிகள் பன்னீர்தாஸை வன்னியர் என நினைத்து பிரசாரம் செய்வதாகவும், வன்னியர் வாக்குகள் உள்ள பகுதிகளில் அவரை வன்னியர் எனவும், பட்டியலின மக்கள் உள்ள பகுதிகளில் ‘நம்ம ஆள்’ எனவும் கூறி வாக்கு கேட்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வேட்பாளரின் சமூக அடையாளம் குறித்து தெளிவில்லாமல் பிரசாரத்தில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறின.