தமிழக தேர்தல் பிரசாரம், பொதுவான பேசுபொருள் இல்லாமல் ‘போர்’ அடிக்கும் போட்டியாக மாறியுள்ளதாக தினமலர் கருத்துக் கட்டுரை குறிப்பிடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக தலைவர்களின் மேடைப் பேச்சுகள் வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாததே என அது சுட்டுகிறது.

முன்னர் தலைவர்கள் தங்களுக்கென தனிப்பாணியுடன் மக்களின் மனநிலையைப் புரிந்து பேசினார்கள்; ஆலோசகர்கள் இருந்தாலும் இறுதி முடிவை தாங்களே எடுத்தனர் என கட்டுரை கூறுகிறது. ஆனால் இப்போது சம்பளத்திற்கு வைத்துள்ள வியூக அமைப்பாளர்கள் சொல்லும் வழியில் தலைவர்கள் செயல்படுவதால், பிரசாரம் நாடகமாக மாறிவிட்டதாகவும் அது விமர்சிக்கிறது.

மேலும், வியூக அமைப்பாளர்கள் மற்ற தலைவர்களின் பிரசார ‘சிறப்பம்சங்களை’ காப்பியடிப்பதால் பேச்சுகள் ஒரே மாதிரியாகி, சுவாரஸ்யமின்றி இலக்கில்லாமல் கடமைக்கு நடப்பதாக கட்டுரை கூறுகிறது. குறிப்பாக இரு திராவிட கட்சிகளின் பிரசாரம் மக்களின் எதிர்பார்ப்பை விட்டு விலகி செல்கிறது எனவும் குறிப்பிடுகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு, அரசு சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கையிலுள்ள வாக்குறுதிகள் (இலவசத் திட்டங்கள் உட்பட) பட்டியலிடப்படுவதுடன், பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை விமர்சிக்க கணிசமான நேரம் ஒதுக்கப்படுவதாக கட்டுரை கூறுகிறது. ஹிந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருத நிதி, பள்ளிக்கல்வி நிதி, கீழடி அகழாய்வு அறிக்கை, ரயில்வே திட்டங்கள் போன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் பேசப்படுவதாகவும், நாகர்கோவில் மற்றும் மதுரை மேடைகளில் கூறப்பட்ட சில கருத்துகள் விமர்சனத்துக்குள்ளானதாகவும் அது குறிப்பிடுகிறது.

மாநில தேர்தலில் மத்திய அரசை தொடர்ந்து விமர்சிப்பதை மக்கள் சம்பந்தமில்லாததாகக் கடந்து செல்கிறார்கள் என்றும், மொழி அரசியலில் இன்றைய சூழலில் பலருக்கு முன்புபோல் ஆர்வம் இல்லை என்றும் கட்டுரை வாதிடுகிறது. மேலும் சில தேசிய விவகாரங்களில் பிரதமர் மோடி மீது நன்மதிப்பு உருவாகியுள்ளதாகக் கூறி, அவரை ‘பலவீனமான பிரதமர்’ என விமர்சிப்பது பலருக்கு பிடிக்கவில்லை எனவும், மாநிலப் பிரச்னைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்னிறுத்தாமல் பழைய விஷயங்களையே பேசுவது தி.மு.க. பிரசாரத்தை சலிப்பாக்கியதாகவும் அது முடிவுக்குவருகிறது.